நேற்று இரவிலிருந்து என் மகனுக்கு உடல் நிலை சரியில்லை. இன்று மாலை நான் வீடு திரும்பியவுடன் எனக்கு மிகவும் களைப்பாக இருந்தாலும் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல முடிவு செய்தேன்.
அங்கு நிறைய பேர் காத்திருந்தார்கள். நாங்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியிருக்குமபோலிருந்தது. நான் என்னுடைய எண்ணை எடுத்துக்கொண்டு காத்திருப்போர் அறையில் அமர்ந்தேன். அங்கு பல முகங்கள், இள வயதினரும், முதியோரும், ஆனால், எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். சில சகோதரர்கள் அங்கிருந்த புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்தார்கள்.
சிலர் கண்களை மூடியிருந்தார்கள், சிலர் சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்தர்கள். பெரும்பாலோர் சலிப்படைந்திருந்தார்கள். சிறிது நேரத்திற்கு ஒரு முறை ‘நர்ஸ்’ ஒரு எண்ணை அழைக்கும்போது மட்டும் மௌனம் கலைக்கப்பட்டது. யாருடைய முறை வருகிறதோ அவருடைய முகத்தில் சந்தோஷம் தோன்றும், உடன் எழுந்து போவார். பிறகு மீண்டும் அமைதி திரும்பும்.
ஒரு இளைஞர் என் கவனத்தை கவர்ந்தார். அவர் ஒரு பாக்கெட் அளவு குர்ஆனை தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தார்; ஒரு முறை கூட தலையை உயர்த்தவில்லை. முதலில் நான் அவரைப்பற்றி ஒன்றும் நினைக்கவில்லை. இருப்பினும் ஒரு மணி நேரம் காத்திருந்த பின் என்னுடைய சாதாரண கண்ணோட்டம் அவருடைய வாழ்க்கை முறை, அவர் எப்படி தன் நேரத்தை உபயோகிக்கிறார் என்ற சிந்தனையாக மாறியது. வாழ்வில் ஒரு மணி நேரம் வீணாகிவிட்டது! அந்த நேரத்தை பயனுள்ளதாக ஆக்குவதற்கு பதில், அது ஒரு சலிப்பான காத்திருத்தல் ஆகி விட்டது. அப்போது தொழுகைக்கு அழைப்பு வந்தது. நாங்கள் தொழுவதற்கு மருத்துவமனையிலுள்ள பள்ளிக்குச்சென்றோம். நான் காத்திருப்போர் அறையில் குர்ஆன் வாசித்துக் கொண்டிருந்தவர் அருகில் நின்று தொழ முயற்சி செய்தேன்.
தொழுது முடித்தபின் நான் அவருடன் நடந்தேன். நான் எந்த அளவிற்கு அவராலும் அவர் தன் நேரத்தை பயனுள்ளதாகக் கழிக்க முயற்சி செய்வதாலும் கவரப்பட்டிருக்கிறேன் என்று கூறினேன். அவர் நம்முடைய பெரும்பான்மையான நேரம் எந்த பயனும் இல்லாமல் வீணாகிறது என்றார். இந்த மாதிரி நாட்கள் நம் வாழ்விலிருந்து எவ்வித உணர்வோ, வீணாகி விட்டதை எண்ணி வருத்தமோ இல்லாமல் செல்கின்றன. அவர் தன் நண்பர் ஒருவர் நேரத்தை முழுமையாக உபயோகிக்கும்படி சொன்னதிலிருந்து பாக்கெட் அள்வு குர்ஆனை எங்கு சென்றாலும் எடுத்துச்செல்ல ஆரம்பித்து விட்டேன் என்றார். அவர் மேலும், தான் வீட்டிலோ, பள்ளியிலோ படிப்பதைக் காட்டிலும், மற்றவர்கள் வீணாக்கக் கூடிய நேரங்களில் தன்னால் அதிகம் குர்ஆன் படிக்க முடிகிறது என்றார். இன்னும், குர்ஆனைப் படிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மையோடு, இந்தப் பழக்கம் அவரை சலிப்பிலிருந்தும் மன அழுத்தத்திலிருந்தும் காக்கிறது என்றார்.
அவர் இப்போது தான் ஒன்றரை மணி நேரமாகக் காத்திருப்பதாகக் கூறினார். பிறகு அவர் கேட்டார், எப்பொது உங்களுக்கு குர்ஆன் படிக்க ஒன்றரை மணி நேரம் கிடைக்கும் என கேட்டார். நான் யோசித்தேன்; எவ்வளவு நேரத்தை நாம் வீணாக்குகிறோம்? நம் வாழ்வில் எத்தனை கணங்கள் கடக்கின்றன, இருந்தாலும் இப்படிக் கடந்து செல்லும் நேரங்களை நாம் கணக்கெடுப்பதில்லை? உண்மையில், குர்ஆனைப் படிக்காமல் எத்தனை மாதங்கள் கடந்து செல்கின்றன? நான் என் தோழரை மதிக்க ஆரம்பித்தேன். மேலும், நான் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதையும் காலம் என் கையில் இல்லை என்பதையும் உணர்ந்தேன்; நான் எதற்க்காகக் காத்திருக்கிறேன்?
என்னுடைய எண்ணங்கள் நர்ஸ் என்னுடைய எண்ணை அழைத்ததால் தடைபட்டன. நான் மருத்துவரிடம் சென்றேன். ஆனால், இப்போது நான் எதையாவது சாதிக்க வேண்டும். மருத்துவமனையிலிருந்து செல்லும்போது வேகமாக புத்தகக் கடைக்குச்சென்று பாக்கெட் அள்வு குர்ஆனை வாங்கினேன். நான் இனி என் நேரத்தை எப்படி செலவழிக்கப் போகிறேன் என்பதில் கவனமாக இருக்கப் போகிறேன்.